விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அண்ணாமலை திடீர் சந்திப்பு ; சனாதன எதிர்ப்பும் -சனாதன ஆதரவும்

செங்கல்பட்டு: தமிழக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளன. இந்நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேற்று திடீரென்று சந்தித்து பேசிக்கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். இவர் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக பாஜகவின் கொள்கைள், சனாதன தர்மத்தை மேடைகள் தோறும் விமர்சனம் செய்து வருகிறார். தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுகவின் கூட்டணியில் உள்ளது. இதற்கிடையே தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியேறும் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களாக பரவின. ஆனால் அதனை முற்றிலுமாக திருமாவளவன் மறுத்தார். இந்நிலையில் தான் இன்று செங்கலப்ட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் ஒன்றாக சந்தித்து கொண்டனர். அரசியலில் எதிரெதிர் துருவங்களான இவர்கள் அனைவரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கொண்டனர். அதாவது அண்மையில் மறைந்த பங்காரு அடிகளார் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க இன்று தருமாவளவன் மேல்மருவத்தூர் சென்றார். அங்கு பங்காரு அடிகளாரின் மனைவி மற்றும் அவரது மகன்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருமாவளவன் பின்னர் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அங்கு அண்ணாமலை, எல் முருகன் ஆகியோர் பங்காரு அடிகளார் குடும்பத்துக்கு ஆறுதல் கூற வந்தனர். இந்த வேளையில் திருமாவளவன்-அண்ணாமலை, எல் முருகன் ஆகியோர் எதிர்பாராத விதமாக சந்தித்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். மேலும் பாஜகவின் கேசவ விநாயகம் தனியே காரில் வந்த நிலையில் அவரையும் திருமாவளவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு என்பது எதார்த்தமாக நடந்த ஒன்றாகும். பொதுவாக அரசியலில் எதிரெதிர் துருவங்களாக செயல்பட்டாலும் கூட பொது இடத்தில் சந்தித்து கொள்ளும்போது தலைவர்கள் பேசி கொள்வது இயல்பான ஒன்றாகும். அந்த வகையில் தான் நேற்று அண்ணாமலை, எல் முருகன் ஆகியோருடன் திருமாவளவன் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.