புதுச்சேரி சட்டப்பேரவை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் :சிறுமி கொலை வழக்கில் மக்கள் கொந்தளிப்பு

புதுச்சேரி: 9 வயது சிறுமி கொலையான சம்பவம் தொடர்பாக புதுச்சேரி நகர் எங்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது. முதல்வர் ரங்கசாமி வரும்போது சட்டப்பேரவை முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வரை டிஜிபி சந்தித்தார். புதுவை முத்தியால்பேட்டை சோலைநகரில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் இதை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது மக்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது. மக்களின் கோபம் இன்று புதுவையில் பல்வேறு இடங்களில் போராட்டமாக வெடித்தது. உருளையன்பேட்டை கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த 5 பெண்கள் சட்டப்பேரவைக்கு வந்தனர். அதில் 2 பேர் கைக்குழந்தையுடன் வந்தனர். அவர்கள் குற்றவாளிகளை துாக்கில் போட வேண்டும் என கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. அந்நேரத்தில் முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவைக்கு வந்தார். இதனால் பெண்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் பெண்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். போலீஸார் அவர்களை கைது செய்ய முயற்சித்தனர். இதனால் போலீஸாருக்கும், அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பெண் போலீஸார் அவர்களை கையால் தள்ள முயன்றபோது அவர்களோடும் கடும் வாக்குவாதம் செய்தனர். "குற்றவாளிகளை விட்டுவிடுங்கள், போராட்டம் செய்பவர்களை கைது செய்யுங்கள், நாளை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு இது நடக்காதா?" என கடுமையாக பேசினர். இதையடுத்து போலீஸார் அவர்களை எதுவும் செய்யாமல் விட்டுவிட்டனர். தொடர்ந்து 10 நிமிடம் கோஷம் எழுப்பிவிட்டு அந்தப் பெண்கள் அங்கிருந்து சென்றனர். அதைத்தொடர்ந்து சட்டப்பேரவைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. இதேபோல நேரு சிலைக்கு பின்புறம் இருந்து திராவிடர் கழகத்தினர் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக வந்தனர். அவர்களை பாரதி பூங்கா அருகில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் சிறுமி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். முதல்வருடன் டிஜிபி சந்திப்பு: முதல்வர் ரங்கசாமியை டிஜிபி ஸ்ரீனிவாஸ் வந்து சந்தித்தார். இச்சந்திப்பின்போது சிறுமி மரணம் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் உள்ளோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாக பேரவை வட்டாரங்கள் தெரிவித்தன. போலீஸார் தடுத்தால் கடலில் இறங்கி கோஷம்: சிறுமி கொலை வழக்கில் நீதி வழங்கக் கோரி சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் கடற்கரைச் சாலை காந்தி சிலை முன்பு இன்று கூடினர். அவர்கள், "குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தரவேண்டும். நீதி வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர். அதையடுத்து அங்கு வந்த பெரியக்கடை போலீஸார் அவர்களை கலைந்து போகக் கூறியதற்கு மறுத்து கோஷங்களை எழுப்பினர். அதைத் தொடர்ந்து பெரியக்கடை போலீஸார் அவர்களை கைது செய்ய முயன்றனர். இதனால் போலீஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸார் அதிகளவில் வரவழைக்கப்பட்ட நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டோர் போலீஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடற்கரைச்சாலை காந்தி சிலைக்கு பின்பகுதியில் இருந்த கடலில் இறங்கினர். அங்கு போலீஸாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கடலில் இறங்கி போராடிய பலரும் சிறுமி காணாமல் போனதிலிருந்து அவரை உயிருடன் மீட்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இதையடுத்து அவர்கள் கடலில் நின்றபடி கோஷம் எழுப்பிய சூழலில் அவர்களை காந்தி சிலைக்கு அருகே போலீஸார் வரவழைத்தனர். தொடர்ந்து காந்தி சிலை முன்பு போராட்டம் நடந்தது. சம்பவம் அறிந்து ஏராளமான இளைஞர்கள் அங்கு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்படியாக சிறுமி கொலையை கண்டித்து புதுச்சேரியில் பல பகுதிகளில் போராட்டங்கள் இன்று நடந்துவருகின்றன. ரூ.20 லட்சம் நிவாரணம்: படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்து உத்தரவு பிறப்பித்துள்ள முதல்வர் ரங்கசாமி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் பெற்றோரிடம் உறுதி அளித்தார்.