புலிகள் ஆதரவு இயக்கங்களுடன் பயணிக்கிறதா காங்கிரஸ்? ; தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக சமீபத்தில் பொறுப்பேற்ற செல்வப்பெருந்தகையை சென்னை சத்தியமூர்த்தி பவனில் சந்தித்த போது தேர்தல் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். திமுகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கசப்பு இருக்கிறதா? - திமுக- காங்கிரஸ் கூட்டணி இடையே கசப்பு ஒன்றும் இல்லை. இனிப்பாக, மகிழ்ச்சியாக இருக் கிறோம். பேச்சுவார்த்தை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. ஒரு போதும் தொகுதிகள் எண்ணிக்கையில் காங்கிரஸ் விட்டுக் கொடுக்காது. அவர்களும் எங்களை விட மாட்டார்கள். காங்கிரஸ் தலைவர்களை பாஜக இழுக்கிறதே. இதை எப்படி எதிர்கொள்ளப்போகிறீர்கள்? - கிராமப் பகுதியில் குழந்தைகளை கடத்துபவர்கள் போல அரசியலில் தலைவர்களையும், அமைச்சர்களையும், எம்பி, எம்எல்ஏக்களையும் கடத்திச் செல்வது தான் பாஜகவின் வேலை. உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் செய்யாத உத்திகளை பாஜக செய்கிறது. அதை நாங்கள் உறுதியாக எதிர்கொள்வோம். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான கட்சிகளுடன் காங்கிரஸ் தேர்தலை சந்திப்பது குறித்து? - காங்கிரஸ் 2024 தேர்தலில் தானா அவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. ஏற்கெனவே 2016, 2019, 2021 தேர்தல்களிலும் அவர்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது. தீவிரவாரத்தை காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது. கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா? - கட்சியை வளர்க்க வேண்டும், காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் தொண்டர்களின் கனவுகளை எனது பதவி காலத்தில் பூர்த்தி செய்ய விரும்புகிறேன். கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் எல்லா கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் மட்டுமே ஒரு தொகுதியில் தோல்வியடைந்தது. அதற்கு என்ன காரணம்? - திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாஜக துணையோடு தேனிக்கு கொண்டு சென்றதும், காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட ரவீந்திரநாத் பலநூறு கோடி பண மழை பொழிய செய்தது தான் காரணம். காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையாக உழைத்தார். ஜனநாயகத்துக்கு விரோதமாக வெற்றியை பறித்துக் கொண்டனர். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தனி தேர்தல் அறிக்கை வெளியிடும் திட்டம் உள்ளதா? - தேசிய அளவில் தேர்தல் அறிக்கை வெளியிட உள்ளனர். தமிழகத்துக்கென தனி தேர்தல் அறிக்கை வெளியிட ஆலோசித்து நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.