பொங்கல் பண்டிகை களைகட்டியது: சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்

தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது. சொந்த ஊரில் பொங்கலை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து 15 லட்சம் பேர் உற்சாகமாக புறப்பட்டு சென்றுள்ளனர்.தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை நேற்று போகியுடன் தொடங்கியது. தைப்பொங்கல் திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த 11-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான நாட்களில் நேற்றைய ஒரு நாள் தவிர்த்து, மற்ற அனைத்து நாட்களும் அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஒரு நாளும் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் தொடர்ந்து 9 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால், கடந்த 11-ம் தேதி முதலே பலரும் சொந்த ஊருக்கு பயணிக்க தொடங்கினர். அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. சென்னையில் கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரத்தில் இருந்து பேருந்துகள் இயங்கின. இந்த நிலையங்களை இணைக்கும் வகையில் 300-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளும் இயக்கப்பட்டன.இதற்கிடையே, அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியபோது, ‘‘சென்னையில் உள்ள மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த 3 நாட்களாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் சொந்த ஊர் புறப்பட்டு சென்றுள்ளனர். மேலும், 7.70 லட்சம் பேர் சொந்த ஊர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது’’