சென்னையில் இந்திய கம்யூ. அலுவலகம் மீது தாக்குதல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

LOGI 1 year ago

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அக்கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு மாநிலக் குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மீது நேற்று இரவு (27.10.2023) சமூக விரோதக் கும்பல்கள் பாட்டிலையும், கற்களையும் வீசி தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமூக விரோத கும்பலின் இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிககள் அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். தாக்குதலுக்கான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டும். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 பேர் கைது: முன்னதாக, சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் மீது நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில், கற்கள் போன்ற பொருட்களை வீசி தாக்குதல் நடத்தினர். அந்த சமயம் கட்சி அலுவலகத்துக்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாநில தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்