என்எல்சி நிறுவனத்தில் அணு மின்சக்தி நிலையம் அமைக்க திட்டம்: நிலக்கரித் துறை செயலர் அம்ரித்லால் மீனா தகவல்

Admin 1 year ago

சென்னை: பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி மூலம் மின்னுற்பத்தி செய்துவந்த என்எல்சி இந்தியா நிறுவனம், முதன்முறையாக அணு மின்சக்தி தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக சென்னையில் நடைபெற்ற சுரங்க இயந்திர உற்பத்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் சுரங்க இயந்திரங்கள் உற்பத்திக்கான ‘மேக் இன்இந்தியா’ முயற்சிகள் குறித்த நிறுவன பங்குதாரர்கள் கூட்டம், கோல் இந்தியா நிறுவன தொழில்நுட்ப இயக்குநர் வீரா ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இந்திய நிலக்கரித் துறைசெயலர் அம்ரித்லால் மீனா பேசியதாவது: கனரக நில ஊர்தி இயந்திரங்கள் மற்றும் நிலத்தடி சுரங்கஇயந்திரங்களைத் தயாரிப்பதில்உள்நாடு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் மகத்தான திறனை வழங்கி வருகின்றனர். ‘மேக் இன் இந்தியா’ என்பது, உள்நாட்டு தயாரிப்புகளின் உற்பத்தி, ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும். ‘மேக் இன் இந்தியா’ முயற்சியின் 3 முக்கிய நோக்கங்களாக, உற்பத்தித் துறையின் வளர்ச்சி விகிதத்தை ஆண்டுக்கு 12-14 சதவீதமாக உயர்த்துவது, பொருளாதாரத்தில் 100 மில்லியன் கூடுதல் உற்பத்தி வேலைகளை உருவாக்குவது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், உற்பத்தித் துறையின் பங்களிப்பு அதிகரிப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவையாகும். என்எல்சி இந்தியா நிறுவனம், அதன் தலைவர் பிரசன்னகுமார் தலைமையில் சீரிய செயல்பாடுகளை வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுத்துச் செல்வதுபாராட்டக்குரியது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் பங்கு விலையும் உயர்ந்து வருகிறது. இத்தகைய சிறப்பான செயல்பாடுகளுக்கிடையே அணு மின்சக்தியிலும் அந்நிறுவனம் கால் பதிக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் பிரசன்னகுமாரிடம் கேட்டபோது, ‘‘என்எல்சி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் சுற்றுச்சூழலை மாசு படுத்தாத மின்னுற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஏற்கெனவே 1500 மெகாவாட் சோலார் மற்றும் காற்றாலை மூலம் மின்னுற்பத்தி செய்து வருகிறோம். இந்த நிலையில் சிறியஅளவிலான அணு மின்சக்தி நிலையம் அமைப்பது தொடர்பாக, அணுமின்சக்தித் துறையில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களிடமும், இந்திய அணு சக்தி ஆராய்ச்சி நிறுவனங்களிடமும் ஆலோசனை நடத்தி வருகிறோம்’’ என்றார்.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்