பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் : பாதுகாப்பை பலப்படுத்த தமிழக காவல் துறை உத்தரவு

Admin 1 year ago

சென்னை: பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த டிஜிபி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்கள்,தங்கும் விடுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒய்ட்பீல்டு பகுதியில் உள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’வில் நேற்று முன்தினம் பிற்பகல் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து பெங்களூரு போலீஸார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைநகர் டெல்லியிலும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்திலும் போலீஸார் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என உளவுத் துறை எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி, போலீஸ் கண்காணிப்பை தீவிரப்படுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், சந்தேகப்பட்டியலில் உள்ள நபர்களின் நடமாட்டங்களையும் தமிழக போலீஸார் கண்காணித்து வருகின்றனர். சென்னையில் முக்கியமான இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும், ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மற்றும்புறநகர் பகுதிகளில் வெளிமாநிலநபர்கள் யாரேனும் சந்தேக நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்களா? என்பது குறித்து கண்காணித்து எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸார் மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர்.



செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்